Saturday, June 4, 2016

குரங்குகள் அழிந்தால் மானிட இனம் அழியும் - தடுக்க முயற்சிக்கும் மனிதர்!

குரங்குகள் அழிந்தால் மானிட இனம் அழியும் - தடுக்க முயற்சிக்கும் மனிதர்!

வித்தியாச மனிதர்களும், மனிதநேய உள்ளத்தினரும் சுற்றி உள்ளதால் தான் உலகம் உயிர்ப்புடன் இயங்குகிறது போல... மனிதர்களின் மீதான கரிசனங்களே குறைந்துபோன எந்திரமயமான காலத்தில் மிருகங்களின் மீதான நேயத்தோடு அவைகளுக்கு உதவி வருகிறார் சேலம் பொன்னம்மாபேட்டையை சேர்ந்த எம்.ஆறுமுகம்.

இவர் அப்படி என்ன நேயத்தோடு உதவுகிறார்? நமது முன்னோர்கள் என சொல்லப்படும் குரங்குகளுக்கு உணவிட்டு வருகிறார்.

ஏற்காட்டில் குரங்குகள் அதிகம். வரலாறு காணாத கோடை வெப்பத்தால் வறண்டு வருகிறது மலை. பசுமை போர்த்திய மலை மொட்டை அடிக்கப்பட்டதாக மாறி வருகிறது. மலைகளையே ஜீவாதாரமாக வாழ்ந்து வரும் குரங்கினம் உணவும், தண்ணீரும் இன்றி தவித்து வருகிறது.

இந்த தவிப்பை தீர்க்க தன்னால் முடிந்ததை செய்கிறார் 40 வயது எம்.ஆறுமுகம்.

அவரே பேசுகிறார்...

'நான் சின்னதா ஒரு மளிகை கடை நடத்தி வர்றேங்க. பெருசா வருமானம் கிடையாது. இருந்தாலும் பொழப்ப ஓட்ட முடியுது. சின்ன வயசுல இருந்தே மிருகங்கள்னா பிடிக்கும். நம்ம ஊருலயே இருப்பதால அடிக்கடி ஏற்காடு போவேன். அப்போ குரங்குகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போயி கொடுப்பேன்.

ஆனா இந்த முறை போகும்போது வெயில் தாக்கத்தை தாங்க முடியாம குரங்குங்க அவதிப்பட்டது. எங்கயும் தண்ணி இல்லை. என் குழந்தைக்கு ஒண்ணுன்னா நான் தானே பாத்துக்குறேன் குரங்குகளுக்கு யார் இருக்கா? குரங்குகளும் நம்ம குழந்தைங்க தான். குரங்குகள் இல்லைனா மலைகள் இல்லை. மலை இல்லைனா மானிட இனம் காலப்போக்கில் அழிந்திடும். இந்த சுழற்சியை பலர் புரிஞ்சுக்குறது இல்ல. அதனால தான் இப்போ மூணு மாசமா தினம் வீட்ல இருந்து தண்ணி புடிச்சுட்டு வந்து அங்கங்க வச்சுருக்குற தண்ணி தொட்டில ஊத்துவேன். அப்புறம் தினம் மாம்பழம் உட்பட்ட பழங்களை ஊட்டுவேன்.

புள்ளத்தாச்சியா இருக்குற குரங்குகளுக்கு சோலை கறுதும், மூக்கு கடலையும் கொஞ்சம் உப்பும் போடுவேன். அப்ப தான் பால் நல்லா ஊறும். இங்க பல குழந்தை குரங்குகளுக்கு போதிய தாய் பால் கிடைக்கிறது இல்லை. உணவு இருந்தாதானே தாய் பால் ஊறும்? தாயின் மார்பு காம்புகளை உரிந்தும் பாலில்லாம அந்த குழந்தை குரங்குகள் தவிப்பதை பார்த்தால் நமக்கு கண்ணில் ரத்தம் வரும். அவ்ளோ கஷ்டம். அதான் என்னால் முடிந்ததை இங்க செய்றேன்.

தினம் மார்கெட்டுல மீதமான பழங்கள், தின்பண்டங்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து குரங்குகளுக்கு போடுகிறேன் என்றார் உருக்கத்துடன்.

அதேசமயம் ஒரு சின்ன கோரிக்கை என்றார். இங்க மலைக்கு வர்றவங்க பிளாஸ்டிக் கவரோட தின்பண்டங்கள், தண்ணி பாக்கெட் வீசுறாங்க. இது ரொம்ப ஆபத்தானது. பசி நேரத்துல குரங்குகள் அந்த ப்ளாஸ்டிக்கையே தின்கிறது. இதனால் மிக பெரிய விளைவு ஏற்படும். எனவே யாரும் பிளாஸ்டிக் பொருட்களை மலையில் வீச வேண்டாம் என்றார் அக்கறையோடு.

பேசிக்கொண்டே குரங்குகளுக்கு மாம்பழத்தை ஊட்டியபடி இருந்தார். அவைகளும் அதை உண்டு விட்டு தங்கள் சேட்டைகளை காட்ட, இவர் கொஞ்ச அந்த காட்சி தாயும் சேயும் அன்பை பரிமாறும் அழகிய காதலாய் தென்பட்டது.

நன்றி : நக்கீரன்

No comments:

Post a Comment