Saturday, June 4, 2016

மன அழுத்தம் போக்க என்ன செய்யலாம் ?


                மன அழுத்தம் போக்க என்ன செய்யலாம் ?


மன அழுத்தம்(டிப்றசன்), ஸ்ட்ரெஸ் , டென்சன் என்ற வார்த்தைகள் இன்றைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தைகளாகி வருகிறது. இதற்கு காரணம் மதிப்பெண்களுக்காக மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அழுத்தம், வாழ்க்கை பற்றிய பயமும் இளவயது பிள்ளைகளின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இதனால் எதிர்மறை எண்ணங்களும், கவலை, பயம், டென்சன் போன்றவையும் ஏற்படுகின்றன. எனவே மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும், இளம் வயதினரிடமும் அன்பாக பழகினால் அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்று உளவியல் வல்லுநர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நண்பர்களுடன் உரையாடுவதை கூட விரும்புவதில்லை.தனிமையில் அமர்ந்து எதையாவது சிந்தித்தவண்ணம் இருக்கின்றனர். இதனால் பள்ளிகளில் கவனிக்கும் திறன் குறைகிறது. எனவே குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த மன அழுத்தத்தை களைவது அவசியம் என்று தெரிவிக்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.

எளிமையான எதிர்பார்ப்பு
கவுன்சிலிங், உளவியல் சிகிச்சை போன்றவற்றையும் அளிக்கலாம். அதேசமயம் இள வயதினருக்கு குரூப் சைக்கோ தெரபி என்னும் சிகிச்சை முறையினை கையாண்டு அவர்களை மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வாழ்க்கையை எளிமையான எதிர்பார்ப்புகளுடன் நடத்த பழக்க வேண்டும். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் கொண்டாடுவது போன்ற பழக்கங்களை சிறு வயது முதல் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நட்பான சூழல் அவசியம்
வயதுக்கு ஏற்ற உணவுடன் பள்ளிக் குழந்தைகள் ஏதாவது ஒரு விளையாட்டில் பயிற்சி செய்வதன் மூலம் உடல் வலிமை பெறும். உடல் எடை அதிகரிக்காது. டென்ஷனான மனநிலை மாறும். டீன் ஏஜ் பருவத்தில் உடல் மற்றும் மனதில் ஏற்படும் குழப்பங்களின் காரணமாக டென்ஷன் வர வாய்ப்புள்ளது. எனவே இளம் வயதிலே வாக்கிங் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். மேலும் டீன் ஏஜ் குழந்தைகள் தங்களது பிரச்னைகளை மனம் விட்டு பேச வீட்டில் பெற்றோர் நட்பான சூழலை ஏற்படுத்தி தர வேண்டியதும் முக்கியம்.

சத்துக் குறைபாடு தரும் மன அழுத்தம்
குழந்தைகளின் உடலில் என்ன நோய் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும். வயதுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு விற்றமின் சத்துக் குறைபாடு, ரத்தத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவுப் பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி கண்டறிந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் நோய்களால் உண்டாகும் தேவையற்ற டென்ஷனை தடுக்கலாம். அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அதுவே மன அழுத்தமாக மாறிவிடும்.
சூரியஒளி இல்லாத குளிர்காலமும் புலத்தில் வாழும் தமிழர்களும்
சூரியஒளி இல்லாத குளிர்காலம் அனைவருக்கும் விற்றமின் D குறைவையும், நோய் எதிர்ப்புசக்தி குறைவையும் ஏற்படுத்துகிறது. உடலின் எதிர்ப்பு சக்தி குறைந்து மற்ற நோய்களின் தீவிரத்தை அதிகரிக்கும். தலைவலி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட தொற்றுநோய்கள் உடலை அடிக்கடி தாக்கும் . விற்றமின் D இன்மையால் மாரடைப்பு , மனஅழுத்தம், ஒற்றைதலைவலி, நரம்பு, மூட்டு சம்பந்தமான நோய்கள் உருவாகின்றன. இதனை புலத்தில் வாழும் தமிழர்கள் கவனத்தில்கொண்டு விற்றமின் D – 35 mg மாத்திரைகளை மறக்காது தினமும் இரண்டு குளிர்காலத்தில் உட்கொண்டால் ஆரோக்கியமாக வாழலாம். அத்துடன் குளிர்கால இருட்டும் மனஅழுத்தத்திற்கு காரணமாகிறது. அக்காலத்தில் றியூப் பல்ப் மூலம் வீட்டு மண்டபத்தை பிரகாசமாக்கினால் மனமும் பிரகாசமாகும், உற்சாகமும் வரும்.

தேவையற்ற டென்ஷன்
நேரத்தை திட்டமிடாததும் டென்ஷனுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. வேலைகளை பகிர்ந்து கொள்வது, குறித்த நேரத்தில் வேலைகளை முடிப்பது, அடுத்தவர் மற்றும் தேவையற்ற விடயங்கள் மீதான எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது, அடுத்தவர் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது போன்றவற்றின் மூலம் மனதை இயல்பாக வைத்திருக்க முடியும். இந்த பழக்கங்களை சிறு வயது முதலே பழக்க வேண்டும் என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள், இதன் மூலம் மன அழுத்தம் ஏற்படுவதில் இருந்து அனைவரையும் காக்க முடியும் என்பது உளவியல் வல்லுநர்களின் கருத்தாகும். அத்துடன் பிடித்த இசை, தியானம் என்பனவும் டென்சனிலிருந்து விடுபட உதவும்.

No comments:

Post a Comment